வாழ்த்துகள் ரித்விகா.106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2

Share:

பிக்பாஸ் சீஸன் 2-ன் கடைசி நாள் இன்று. 105 நாள்கள். (தொடக்க நாளையும் சேர்த்தால் எண்ணிக்கை 106). மகிழ்ச்சி, கோபம், பரவசம், சிரிப்பு, கண்ணீர் என்று நவரசங்களுடன் இறுதி நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ‘ரித்விகா’தான் வெற்றியாளர் என்று ஏதோவொரு கட்டத்தில் பெரும்பாலோனோர் உணர்ந்துவிட்டதாலும் இதர போட்டியாளர்கள்கூட பெரிய சர்ச்சைகள் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டதாலும் இன்று பெரிதான சஸ்பென்ஸ் ஏதுமில்லை. டேனி, யாஷிகா போன்ற வலுவான போட்டியாளர்கள் இறுதி வரிசையில் இருந்திருந்து அவர்களுடன் மோதி ரித்விகா இந்தப் பரிசை வென்றிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்கிற பொன்மொழியை நிஜமாக்கியிருக்கிறார் ரித்விகா. சீஸன் 2 வின்னர், ரன்னர், கமலின் காஃபி, இந்த சீஸனின் எந்த எபிசோடையும் பார்க்காத முன்னாள் பிரபலம், கலக்கப்போவது யார் டீமின் ஆசத்தல் ஸ்பூஃப் என பிக்பாஸ் ஃபைனலில் நடந்த 16 ஹைலைட்ஸ் இதோ


பிக்பாஸ் வீட்டின் நாய்க்குட்டி உட்பட அனைவருக்குமே ரித்விகாதான் வெற்றியாளர் என்பது தெரிந்திருக்கும்போது ரித்விகாவுக்கு இது உள்ளுற நிச்சயம் அழுத்தமாகத் தெரிந்திருக்கும். என்றாலும், பரிசை வாங்கியவுடனே, ஏ ‘நான் அப்பா ஆயிட்டேன்’ என்று கதறிய சென்றாயனுக்கு ஈடாக ரித்விகா கதறினார். அதுவரை அடக்கி வைத்திருந்த பரவசம் முழுவதும் மகிழ்ச்சியாகவும் கண்ணீராகவும் வந்தது போல. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் வந்த ஜனனி மற்றும் விஜிக்காவது செல்போன் ஆறுதல் பரிசாக கிடைத்தது. ஆனால் இரண்டாமிடத்தில் வந்த ஐஸ்வர்யாவுக்கு வெங்கலக்கிண்ணிகூட கிடைக்கவில்லை. பாவம், அது பாட்டுக்கு ‘We love we love big boss’ என்று கத்திக்கொண்டிருந்தது. பிக்பாஸ் தனது பிரியாவிடைச் செய்தியை தரும்போது காதலனைப் பிரியும் சோகமும் துயரமும் அவரின் முகத்தில் தெரிந்தது. தனிமைச் சிறையில் அடைக்கப்படுபவர்கள் அஃறிணைப் பொருள்களின் மீது சிநேகம் கொள்வதின் மூலம் தங்களின் தனிமையை சமன் செய்துகொள்ள முயல்வார்களாம். அந்த வகையில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸின் குரல் போல. 

பிக்பாஸ் போட்டியை நன்கு புரிந்துகொண்டு விளையாடியவர்களில் ஒருவராக ரித்விகாவைச் சொல்லலாம். ‘இந்த ரூல் அப்படித்தான் இருக்கும்... இல்ல... அது அப்படி இருக்காது’ என்றெல்லாம் தொடக்க நாள்களிலேயே அவர் விவரித்ததைப் பார்த்தபோது இதர சீஸன்களை அவர் ஓவர் டைமில் பார்த்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. சர்ச்சைகளில் சிக்காமல் மிக ஜாக்கிரதையாக இருந்தார். இதற்கு அவரது இயல்பான குணாதிசயமும் துணை நின்றது. ஆனால், இதையொரு புகாராகவே மற்றவர்கள் நாமினேஷன் சமயங்களில் தொடர்ந்து சொல்லும்போது பிறகு அவசியமான இடங்களில் ஜோதியில் கலந்தார். அதிர்ஷ்டமும் அவருடைய பக்கத்தில் இருந்தது. ‘ரூல்ஸ் ரித்விகா’ என்ற பெயரை இதர போட்டியாளர்களிடம் சம்பாதிக்கும் அளவுக்கு கறாராக இருந்தார். ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்கத் துடிக்கும் ‘முதல் பெஞ்ச்’ மாணவன் போல் பிக்பாஸிடம் பல சமயங்களில் நல்ல பெயரை வாங்கினார். கூடுதலாக, ‘பொண்ணு.. தமிழ்ப் பொண்ணு’ என்கிற பிரம்மாஸ்திரத்தை இவர் எடுத்ததில் வெற்றி இவரது கையில் வந்து சேர்ந்தது. 

ஜனனியை ஏறத்தாழ இன்னொரு ரித்விகா என்றுகூட சொல்லலாம். ஆனால் அவசியமான சந்தர்ப்பங்களில்கூட மெளனம் சாதித்தது, நட்பு காரணமாக பாரபட்சம் பார்த்தது, டாஸ்குகளை சரியாகக் கையாளாதது போன்றவை இவருக்கு பின்னடைவை அளித்திருக்கலாம். இதைப் போலவே விஜியை ‘இன்னொரு ஐஸ்வர்யா’ எனலாம். டாஸ்க்குகளை ஆர்வமாக செய்த இவர், சண்டை என்று வந்தால் ‘மவனே’ என்று புடவையை வரிந்துகொண்டு கிளம்பிவிடுகிறார். இந்தக் குணாதிசயத்துக்காகவே ‘கலகம் உண்டாகட்டும்’ என்று இவரை திட்டமிட்டு ‘வைல்ட் கார்டாக’ பிக்பாஸ் அனுப்பியிருக்கலாம். இவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்திருந்தால் ‘வைல்ட் கார்ட்லதானே வந்தே’ என்கிற ஒரே காரணத்தைக்கூட தராமல் கடுமையான போட்டியாளராக இருந்திருப்பார். குறுகிய நேரத்திலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்த வகையில் பாராட்டுக்குரியவர். 

ஐஸ்வர்யா, சர்ச்சைகளின் நாயகி. பிக்பாஸ் வீட்டு கேமராக்களுக்கு அதிக தீனியையும் அன்பையும் தந்தவர். ‘அவன் கிட்ட டிவியைப் போடுன்னு சொன்னா கீழே போட்டுடுவாம்மா’ என்கிற சிட்டி ரோபோ போல பிக்பாஸ் தரும் டாஸ்க்குகளை முடிக்க வேண்டுமென்றால் எதையும் யோசிக்காமல் இவர் செய்த விஷயங்கள் இவருக்கே எதிராக அமைந்தன. சமயங்களில் ‘ரெட் சிப்’ பொருத்திய ரோபாவாகவும் இவர் மாறியதில் பார்வையாளர்களின் அதிக எதிர்ப்பையும் சம்பாதித்தவர். ‘எல்லாம் எங்க வீட்டுப் பிள்ளைக’ என்கிற முதிர்ச்சியைக் கொண்டிருக்கிற கமலின் கோபத்தையும் பாராமுகத்தையும்கூட சம்பாதித்த ஒரே போட்டியாளர். 

இப்படி பல எதிர்மறையான அம்சங்களை வைத்துக்கொண்டு இரண்டாம் இடம் வரை ஐஸ்வர்யா முன்னேறியது ஆச்சர்யம். எதையும் பூசி மெழுகாமல் அந்நந்த நேரத்து உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்திவிடும் நேர்மை சிலருக்கு பிடித்திருக்கலாம். பலருக்குப் பிடிக்கவில்லை. ‘யாஷிகா இல்லையென்றால் இத்தனை நாள்கள் என்னால் தாக்குப் பிடித்திருக்க முடியாது’ என்கிற உண்மையை சபையிலேயே ஒப்புக்கொள்ளும் நேர்மையும் இவருக்கு இருந்தது. வேற்றுக் கலாசாரத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அதனால் கூடுதலாக எழும் எதிர்ப்புகளையும் சமாளித்து இவர் முன்னகர்ந்தது பாராட்டுக்குரிய விஷயம். இந்த வகையில் ‘மினி ஓவியா’ என்றுகூட ஐஸ்வர்யாவைச் சொல்லலாம். 

‘தமிழ்நாடு யாரையும் கைவிட்டதில்லை. உங்களையும் கைவிட மாட்டோம்’ என்று பார்வையாளர்களில் இருந்த ஒரு பெண் ஐஸ்வர்யாவை நோக்கிச் சொன்னார். ஐஸ்வர்யா செய்த பிழைகளை ‘தங்கள் வீட்டுப் பிள்ளை’யின் சறுக்கலாக நினைத்து நிச்சயம் தமிழகம் ஏற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. 

வலுவான எதிர்நாயகன் இல்லாமல் எந்தவொரு கதையும் சுவாரஸ்யம் பெறாது. அந்த வகையில் ஐஸ்வர்யா ஒரு சுவாரஸ்யமான Antagonist. ‘ராணி மகாராணி’ டாஸ்க்கில் ஒரு மாபெரும் பிழையைச் செய்தாலும் அதில் இவரின் தோரணை அபாரமாக இருந்தது. இவரின் நடிப்புத்திறனை தமிழ்த்திரை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 



‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா...’ என்ற பாடலோடு Grand Finale நாள் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கியது. அது, அங்கவஸ்திரமா அல்லது துண்டா என்று தெரியவில்லை, கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சட்டையோடு தைத்த டெய்லரைப் பாராட்ட வேண்டும். அப்படியொரு விநோதமான சட்டை மற்றும் வேட்டியோடு வசீகரமான தோற்றத்தில் உள்ளே நுழைந்தார் ‘விரு விரு மாண்டி... விருமாண்டி.’ “இரண்டாம் சீஸனின் முடிவு என்று சொல்வதைவிட நிறைவு என்று சொல்லலாம். இந்தப் பயணம், அனுபவம் எனக்கு நிறைவைத் தந்திருக்கிறது. நம் பாரம்பர்யக் கலைகளை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கரகாட்டம், மயிலாட்டம் போன்றவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்” என்று தன் உரையை ஆரம்பித்தார் கமல். 

இதில் பலரைப் பற்றிய பாராட்டுக்கள் இருந்தன. பலர் நட்சத்திரமாக மாறினார்கள். பலர் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக மாறினார்கள். விமர்சனங்கள் இருந்தன. என்னைப் பற்றிகூட விமர்சனம் இருந்தது. அவற்றுக்கு பதில் சொல்லவில்லை என்று எவரும் நினைக்கக் கூடாது. அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், சில விமர்சனங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. காலப்போக்கில் அவையே பதிலாக மாறிவிடும். நான் ‘சாட்சிபூதமாக’ மட்டும் இருந்திருக்கிறேன். நிகழ்வதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். தலையிடக் கூடாது. அனைவரையும் பாரபட்சமின்றிதான் பார்த்தேன். அவர்களின் குணக்கேடுகள், நலன்கள் எனக்கு பொழுபோக்காகத்தான் இருந்தன. கோபம் வரவில்லை. ஆனால், உங்களில் பலருக்கு கோபம் இருந்தது. எனக்கும் கோபம் வந்தாலும் தற்காலிகம்தான். எங்க வீட்டுப் பிள்ளை தப்பு பண்ணா என்ன இருக்குமோ அப்படித்தான். நீடிக்காது. ஆனால், உங்களில் சிலர் கட்சி பிரித்துக்கொண்டு போராடியதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. மனித மனங்களைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த 106 நாள்களின் பயணம், நல்ல பயணமாக இருந்தது’ என்ற நீண்ட முன்னுரையை வழங்கினார். 

அடுத்ததாக பார்வையாளர்களுடன் கேள்வி பதில் நேரம் தொடங்கியது ‘அடுத்த சீஸன்தானே, பண்ணிட்டா போச்சு’ என்று முதல் கேள்வியை எதிர்கொண்ட கமல், அடுத்த கேள்விக்கு ‘பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராகக் கலந்துகொள்ளும் பேரார்வம் ‘அரங்கேற்றம்’ கமலுக்கு உண்டு. இப்பவும்கூட சிறிய ஆர்வம் இருக்கிறது. இதுவொரு அரிய வாய்ப்பு” என்றார். ‘பிக்பாஸ் தருணங்களில் மிகப் பிடித்தமானது என்றால், இதோ இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் அல்லவா, அதுதான். முன்னர் கேள்வி-பதில்களை அநாமதேயர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைவிட, திரைப்பட பாத்திரங்களாக அல்லாமல் நான், நானாக மக்களைச் சந்திக்கும் இந்தத் தருணம்தான் பிடிக்கிறது” என்றவுடன் கேள்வி-பதில் நேரம் ‘முடித்து’ வைக்கப்பட்டது. 

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்தார் கமல். தமிழ்ப் பெண்கள் பாரம்பர்ய உடையில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. ‘கல்யாண கேக்குல இருக்கற பொம்மை மாதிரி இருக்காங்கள்ல’ என்று மூவரையும் புகழ்ந்தார். பிக்பாஸ் வீட்டுக்கு ஒரே டெய்லர் போலிருக்கிறது. பிறகு மமதி அணிந்திருந்த உடையும் இதேபோல்தான் இருந்தது. 

``வெற்றியாளர் யாருன்னு இவங்க ஏறத்தாழ யூகிச்சிட்டாங்க’ என்று பார்வையாளர்களைப் பற்றி சொன்ன கமல், போட்டியாளர்களை அவரவர்களின் ரசிகர்களுடன் பேச வைத்தார்

‘டாஸ்க்குன்னு வந்தா கொலைவெறியாயிடறீங்களே' என்றார் விஜி ரசிகர். ‘ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்களை எங்க வீட்டுப் பொண்ணா பார்க்க ஆரம்பிச்சிட்டோம்’ என்றார் ரித்விகா ரசிகர். ஒரு முன்னணி நடிகருக்கான விசில்களும் கைத்தட்டல்களும் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தன. “அந்தந்த நேரத்து உணர்ச்சியை அப்போதே வெளிப்படுத்தி பிறகு எழுந்து வந்துடறீங்க. அது எனக்குப் பிடிக்கும்’ என்றார் ஓர் இளம்பெண். இவரைப் பார்ப்பதற்கு இலங்கையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். ‘உங்க தமிழ் பிடிக்கும். எங்க பசங்களும் அதை விரும்பறாங்க’ என்றார். (விட்டா சங்கத்தமிழ், வழக்குத் தமிழ், வட்டாரத் தமிழ் போன்வற்றுக்குப் பிறகு ‘ஐஸ்வர்யா தமிழ்’ என்று புது வகைமையை உருவாக்கிவிடுவார்கள்போல. வெளங்கினாப்லதான்!).

“உங்க மேல விமர்சனங்களும் இருக்கு. விமர்சகர்களைக் கொண்டு வரவில்லை. உங்களுக்கு தாக்கம் வந்து விடக்கூடாது என்பதால். வெளியில் வந்து பாருங்கள்” என்று போட்டியாளர்களிடம் கமல் சொன்னதற்குப் பிறகு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன. சீஸன் 2-ன் முன்னாள் போட்டியாளர்களில் பொன்னம்பலம் மற்றும் ஜனனியைத் தவிர அனைவரும் மேடையில் ஒவ்வொருவராக தோன்றி நடனமாடினார்கள். அவரவர்களுக்குப் பொருத்தமான பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டது சிறப்பு. சில முக்கியமான வசனங்களும் இணைந்து ஒலித்தன. ‘வீட்டு குத்துவிளக்கு’ பாடலுக்கு சிறப்பாக நடனமாடினார் நித்யா. ‘பீலா.. உடாத.. சீனைப் போடாத’ பாடலை மும்தாஜிற்கு போட்டது குறும்பு. கடைசியில் ‘உலக நாயகனே’ பாடலோடு இந்த நிகழ்ச்சி முடிந்தது. 

மஞ்சள் சோபாவில் வந்து அமர்ந்த கமல், “நான் இப்ப ஹவுஸ்மேட்டா இருக்கேன். நீங்க ஒவ்வொருத்தரும் ஆங்க்கரா இருந்து கேள்வி கேட்கலாம்’ என்று அரிய சந்தர்ப்பத்தை முன்னாள் போட்டியாளர்களுக்கு தந்தார். ‘உக்காருப்பா தம்பி’ என்பது மாதிரி கையைக் காட்டி இந்த டாஸ்கை சிறப்பாக  துவக்கினார் ஜனனி. ஆனால் சில நிமிடங்களில் கமல்ஹாசனே ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’யாக திரும்பி வந்து விட்டார். ஹவுஸ்மேட்டைக் காணவில்லை. ஆனால் எதிர் தரப்பின் பல கேள்விகளை வைத்து கேட்டவர்களிடமே பந்தை தள்ளி விட்டதில் கமலின் சமயோசிதமும் குறும்பும் வெளிப்பட்டது. ‘இந்த ஸ்ட்ராட்டஜி –ன்னு ஒண்ணு பண்றீங்க பாருங்க. அதெல்லாம் தேவையேயில்ல. நீங்க.. நீங்களா இருந்தாலே போதும். நீங்க தப்பு பண்ணா கூட மக்கள் ஏத்துப்பாங்க. அவங்களுக்கும் இந்த ஸ்ராட்டஜின்ற விஷயம் பிடிக்கலை” என்றார் கமல். (ஐஸ்வர்யா உட்பட பலர் அப்படித்தானே இருந்தாங்க பாஸூ. பஞ்சாயத்துல போட்டு காய்ச்சிட்டு இப்ப இப்படிச் சொன்னா எப்படி?) 

உங்க பக்கத்துல வந்து உக்காந்துடுவேன்’ என்று மிரட்டிய மும்தாஜ் அது போலவே வந்து அமர்ந்து ‘உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு.. என் ராசா.. என் மேல் ஆசையில்லையா?” என்று பாடாத குறையாக, ‘தப்பு செய்யும் போது திட்டியிருக்கீங்க. நல்லது செஞ்ச போது பாராட்டியிருக்கீங்க. ஆனா நான் செஞ்சது எதுவுமேவா உங்களுக்குப் பிடிக்கலை?’ என்று ‘ஐயோ பாவமாக’ கேட்ட போது ‘நீங்கள் காட்டிய பிரியம் பிடித்திருந்தது. அதில் நிஜம் இருக்கத்தான் செய்தது’ என்றார் கமல். 

இதற்குப் பிறகு அனைத்துப் போட்டியாளர்களுக்குமான ஒரு குறும்படம் போடப்பட்டது. சர்ச்சையான காட்சிகளின் தொகுப்பை் போட்டு சபையில் அவர்களின் மானத்தை வாங்கினார்கள். 

பிறகு நிகழ்ந்தது இன்றைய நிகழ்ச்சியின் ஒரு முக்கியமான, ரகளையான பகுதி எனலாம். ‘கலக்கப் போவது யாரு’ டீம், பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து ஓர் அட்டகாசமான spoof நாடகத்தை நடத்தினார்கள். சிரித்து சிரித்து கண்ணீரே வந்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்திருந்தவர்கள் கூட, இதை தவற விடாதீர்கள். அத்தனை சுவாரஸ்யமான பகுதி. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயத்தையும் கிண்டலடித்து தீர்த்தார்கள். ஒரேயொரு கம்ப்ளெயிண்ட்டில் அனைவரையும் கோர்த்து விடும் ஜனனியின் பாத்திரத்திற்குத்தான் அதிக டேமேஜ். 

மும்தாஜாக நடித்திருந்தவரும் எல்லாவற்றிற்கும் கண்ணீர் விட்டு அசத்தியிருந்தார். ‘முடியை கலர் பண்றதுக்குப் பதிலாக நான் விஷம் குடிச்சு செத்தே போயிடுவேன். எங்கே விஷபாட்டில்.. என்று மும்தாஜ் கேட்க, ‘கூப்பிட்டீங்களா” என்று ஜனனி வந்து நின்றது நகைச்சுவையின் உச்சம். மஹத்தின் கையை வைத்து மற்றவர்களை அடிக்கும் யாஷிகாவின் பகுதி சிறப்பு. பாலாஜியாக நடித்திருந்தவர் மிகத் துல்லியமாக தன் பாவனையை வெளிப்படுத்தினார். இதில் கமலையும் இணைத்திருக்கலாம். பதிலாக கவுண்டமணியை கொண்டு வந்திருந்தார்கள். ‘இது உங்களை சந்தோஷப்படுத்துவற்காகத்தான். காயப்படுத்த அல்ல’ என்கிற பாதுகாப்பான குறிப்பை கமல்ஹாசன் பிறகு வழங்கினார். அடுத்து பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு ஒளிபரப்பானது. மலரும் நினைவுகளாக இது அமைந்திருந்தது. 

**

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் சிலர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவர்களும் இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டு விட்டார்கள் அல்லது பாதிக்கப்பட்டு விட்டார்கள். எனவே அவர்களின் குரலும் இங்கு ஒலிக்க வேண்டும் என்பது நல்ல நோக்கமே. ஆனால் பிக்பாஸ் டீம் எதிர்பார்த்திருந்த மோதலும் ஏற்பட்டதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். 

‘ஏன் தப்பான ஸ்ட்டராஜி யூஸ் பண்ணீங்க?’ என்று கயல்விழி முன் வைத்த கேள்விக்கு ஐஸ்வர்யா சொன்ன பதில் எவருக்கேனும் புரிந்திருக்குமானால் தபால் உறையில் எழுதி எனக்கு அனுப்பவும். “எங்க தமிழ்நாட்டுக்கு வந்தப்புறம் கோபமே வரக்கூடாது. குணமா வாயில சொல்லணும்” என்றார் பாலாஜியின் அம்மா. ஆம். தமி்ழகம் ஒரு அமைதிப்பூங்கா. தவறை உணர்ந்து விட்டால் அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர் சொன்னது சரியானது.

‘டாஸ்க்குன்னு வந்துட்டா அந்நியனா மாறிடறீங்களே?” என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார் விஜியின் அண்ணி. இந்தக் கேள்வியை விஜியிடமும் பின்னர் தனியாக அவர் கேட்கலாம். ‘am dedicated to big boss’ என்று பதில் அளித்தார் ஐஸ்வர்யா. (பிக்பாஸை நம்பினோர் கைவிடப்படுவர்!). ‘எனக்கு வாய்ப்பு கிடைச்சா வெச்சு செய்வேன்’ என்று முன்னர் ஆவேசப்பட்ட உமா ரியாஸ்கான், ‘என் பையனை எல்லோரும் ப்ளெஸ் பண்ணுங்க’ என்று முடித்துக் கொண்டது நிம்மதி. ‘ஷாரிக் பையாவோட அம்மா நானு’ என்று இவர் அறிமுகப்படுத்திக் கொண்ட போது மையமாக சிரித்தார் ஐஸ்வர்யா. “உங்களின் நண்பர்கள் வெளிவந்து விட்ட பிறகு, இத்தனை எதிர்மறைகளின் இடையில் எப்படி தாக்குப் பிடித்தீர்கள்?” என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டார் பிராச்சி. “நண்பர்களின் உதவியால் எப்படியோ சமாளிச்சேன்” என்றார் ஐஸ்வர்யா.

நல்லாத்தானே போயிட்டிருக்கு’ என்று சென்ற இந்தப் பகுதியில் மும்தாஜின் சகோதரர் வந்தவுடன் சற்று ரணகளமாக மாறியது. அமைதியான பாசமலராகவும், பிள்ளைப் பூச்சியாகவும் இருந்த இவரால் இப்படி பேச முடியுமா என்று ஆச்சரியப்படுமளவிற்கு வெளுத்து வாங்கினார். “வீட்ல இருக்கும் போது சண்டை வரும். அப்புறம் சமாதானம் ஆயிடுவீங்க. அது ஓகே. ஆனா வெளியே போனப்பறமும் அப்படி இருக்கறது சரியா? மும்தாஜை திட்டி வர்ற டிவிட்களுக்கெல்லாம் லைக் போட்டீங்க. மஹத் ரெட் கார்ட் வாங்கி வெளியே வந்ததுக்கு கைதட்டி விசிலடிச்சீங்க. ஒரு பொண்ணு மேல நடந்த விஷயங்களில் உங்களுக்கு உடன்பாடா?” என்று நித்யாவிடம் கேட்டார். “மும்தாஜ் ஆர்மி என்னை வெச்சு வெச்சாங்க.. எங்க தனிப்பட்ட விஷயத்தையும் உள்ளே இழுத்தாங்க.. என்று நித்யா அளித்த நீ்ண்ட பதிலை பொறுமையாகக் கேட்ட மும்தாஜின் சகோதரர், “அதுக்கு இது பதில் இல்லையே?” என்று சொன்னது சரியானது. மும்தாஜ் ஆர்மி செய்யும் அத்துமீறல்களுக்கு அவர் எப்படிப் பொறுப்பாவார்? 

‘என்னோட டிவிட்டருக்கு அட்மின் இருக்காங்க’ என்று ஒரு சமயத்தில் நித்யா சொன்னது ‘ராஜா’த்தனமாக இருந்தது. ‘ஒரு பார்வையாளராக நான் சில விஷயங்களை ரசித்தேன். அதில் என்ன தப்பு?’ என்று நித்யா சொன்ன பதில் ஏற்படையதாக இல்லை. ‘பெண்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைச் செய்கிறேன்” என்று சொல்லும் ஒரு பெண்மணி, ஒரு பொதுநிகழ்ச்சியில் சக பெண்ணின் மீது நிகழ்ந்த அவமதிப்புகளின் மீது, தனிப்பட்ட காரணங்களுக்காக மகிழ்வது மோசமான விஷயம். இதை ‘பார்வையாளர்’ என்ற கோணத்தில் மழுப்பக்கூடாது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்டவர் என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியில் உள்ள அழுத்தம் நித்யாவிற்குத் தெரியும். இதில் ஏற்படும் கசப்பை வெளியில் சென்றும் அவர் தொடர்வது முறையானதாக இல்லை. சமூகவலைத்தளங்களில் வரும் பின்னூட்டங்களை ஒரு பிரபலம் கருத்தில் கொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவேயில்லை. விஷச்சுழலுக்கு அது இட்டுச் செல்லும். நித்யா அதற்குப் பலியானது துரதிர்ஷ்டமானது.