இறைச்செய்தியாளர் ஆன ஹீரோ !

Share:

புதுக்கோட்டை சண்முகசுந்தரம் , அந்தக் காலத்து பி . ஏ பட்டதாரி . போலீஸ் அதிகாரி ஆவது அவரது லட்சியம் . இதற்காக தேர்வு எழுத சென்னை வந்தார் . திடீரென ஒரு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதால் தேர்வு எழுத முடியவில்லை . பின்னர் ஆளுநர் மாளி கையில் பணிக்குச் சேர்ந்தார் .
ஆள் அம்சமாக இருப்ப தால் அவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினார்கள் . ராஜா , பி . ஏ . , என்கிற பெயரில் ‘ ஆயிரம் காலத்துப்பயிர் ' படத்தில் அறிமுகமானார் . பின்னர் ஏ . வி . எம் . தயாரித்த “ நானும் ஒரு பெண் ' மூலம் பிரபலமானதால் ஏ . வி . எம் . ராஜன் என்கிற பெயரிலேயே பிரபலமானார் .
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திருமணம் ஆகி குழந்தை , குட்டி என்று செட்டில் ஆனவர் . குடும்பச் செலவுகளை சமாளிக்கவே பொழுதுபோக்காக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் , அந்தக் காலத்தில் சிவாஜிக்கு எழுதப்பட்டும் கதைகளில் , சிவாஜியால் நடிக்க முடியாமல் போனால் அந்த வாய்ப்புகள் ஏ . வி . எம் . ராஜனுக்கே கிடைக்கும் . அதனால் இவரை செல்லமாக ' ஏழைகளின் சிவாஜி ' என்பார்கள் . சிவாஜியும் இவர் மீது அன்பு கொண்டிருந்தார் . தன்னுடையப்படங்களில் தம்பி கதாபாத்திரம் இருந்தால் , ' ஏ . வி . எம் . ராஜனை கூப்பிடுங்கப்பா . . . ' என்பாராம் .
' நானும் ஒரு பெண் ' படத்தில் ‘ ஏமாறச் சொன்னது நானா ? என்று புஷ்பலதாவை கிண்டல் செய்துப் பாடி நடித்தார் . அதே புஷ்பலதாவை பின்னர் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் . கே . பாலச்சந்தர் இயக்கிய ' மேஜர் சந்திரகாந்த் ' படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ரஜினிகாந்த் . பின்னர் ' அபூர்வ ராகங்கள் ' படத்தில் தான் அறிமுகப்படுத்திய இளம் நடிகரான சிவாஜி ராவுக்கு அந்தக் கதாபாத்திரத் தின் பெயரைதான் ஸ்டேஜ்நேம் ஆக தேர்ந்தெடுத்தார் பாலச்சந்தர்.
வாய்ப்புகள் குறைந்த நிலையில் சொந்தப் படங்கள் எடுத்து கடனாளி ஆனார் . கடன் தொல்லை தாங்காத நிலையில் மதம் மாறி மன ஆறுதல் பெற்றார் . இறைச் செய்தியாளராக நாடு முழுக்க பிரபலம் ஆனார் . நடிகர் விஜய் வீட்டில் அடிக்கடி இவரது சுவிசேஷக் கூட்டங்கள் நடைபெறும்.