வடிவேலின் வாழ்க்கை சுவாரசியங்கள் !!!
சினிமாவில என்ட்ரியான நேரம் அது. 'தேவர் மகன்’ல கமல் சாரோட நடிச்சதால, கொஞ்சம் பிரசித்தி ஆகியிருந்தேன்.
ஒருநாள் காலையில சென்னையில இருந்து அவசரமா வரச்சொல்லி போன். மதுரையில இருந்து ஃப்ளைட் புடிச்சு வந்து சேர்ந்துட்டேன். அரை மணி நேரத்துல நடிச்சுக் கொடுத்துட்டு, மறுபடியும் ஃப்ளைட் புடிச்சு சாயங்காலமே மதுரை திரும்பிட்டேன்.
வூட்டுக்குள்ள நொழைஞ்சா, எங்க அப்பத்தா, ''என்னடா தம்பி... சென்னைக்குப் போகலியா?''னு கேட்டுச்சு. ''இல்ல அப்பத்தா... போயி, நடிச்சுக் குடுத்துட்டு வந்துட்டேன்''னு சொன்னேன். அப்பத்தாவால நம்பவே முடியல. ''எதுலடா போனே..?''னு கேட்டுச்சு. ''ஃப்ளைட்ல''னு சொன்னேன்.
''ஏண்டா... பிளைட்ல போறதுக்கு எம்புட்டு நேரமாகுது... எவ்வளவு செலவாகுது''னு அப்பத்தா ஆர்வமா விசாரிக்க... ''4,500 ரூபா'’ சொன்னதும் அப்பத்தாவுக்கு மலைப்பு தாளல. ''பணங் கொஞ்சம் ஜாஸ்திதேன். அதுக்கு என்ன பண்ண முடியும்... அரை மணி நேரத்துல சென்னைக்குப் போறதுனா சும்மாவா''னு நான் சமாதானப்படுத்தப் பார்த்தேன்.
பாத்தா... இன்னும் ஆவேசமாயிடுச்சு. ''என்னது... அரை மணி நேரத்துல வந்துட்டியா?''னு கேட்டஅப்பத்தா,அதுக்கப்பு றம் கேட்டதைத்தான் இப்பவும் மறக்க முடியல.
''ஏண்டா, ரயில்ல நூறு ரூபா காசு கொடுத்தா நைட் முழுக்கப் படுக்கப் போட்டு காலையில கொண்டாந்து பத்திரமா எறக்கி விடுறானுக. ஆனா, ஐயாயிரம் ரூபா வாங்குற ஏரோபிளேன்ல அரை மணி நேரத்துக்கு மேல ஒக்கார விட மாட்டேங்குறான்னா என்னடா நியாயம்? நீ அவனுகளை சும்மாவா விட்ட?
வாங்குன ஐயாயிரத்துக்கு ஆச தீர அஞ்சாறு மணி நேரம் சுத்திக் காட்டுங்கடானு சொல்ல வேண்டியதுதானே? அடுத்த தடவை என்னையுங் கூட்டிக்கிட்டுப் போ. அவனுககிட்ட நானே கேக்கறேன்''னு சொல்ல சொல்ல, சிரிச்சே செத்திடுவேன் போல இருந்துச்சு.
2011 இல் அவள் விகடனில் வெளிவந்த ‘வேலு பேசுறேன் தாயி’ தொடரில் வடிவேலு .
